Pallava art and architecture|பல்லவர்களின் கலை மற்றும் கட்டிடக்கலை|பல்லவர்களின் கோவில்கள்- Part 2

பகுதி 1 ன் தொடர்ச்சி... பல்லவர்களின் கலை மற்றும் கட்டிடக்கலை...
பல்லவர்கள் கட்டிடக்கலையின் மூன்று பிரிவுகள்:
1. குடைவரை கோவில்கள்
அ) மகேந்திரவர்மன் பாணி
                          காலம் I  
                          காலம் II 
                          காலம் III
ஆ) மாமல்லன் பாணி
2. ஒற்றைக்கல் கோவில்கள் (Monolithic Temples)
3. கட்டுமானக் கோவில்கள் (Structural Temples)  

பல்லவர்களின் கோவில்கள்
1. குடைவரை கோவில்கள்
அ) மகேந்திரவர்மன் பாணி
காலம் I  

காலம் II 
ஒரு கல் மண்டபம்- திருக்கழுக்குன்றம்
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டிலிருந்து மாமல்லபுரம் செல்லும் சாலையில் செங்கல்பட்டிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் திருக்கழுக்குன்றம் அமைந்துள்ளது. இக்கோவில் மகேந்திரவர்மனால் தொடங்கப்பட்டு மாமல்லனால் முடிக்கப்பட்டிருக்கலாம் என்று தொல்லியல் அறிஞர்கள் கருதுகின்றனர். கோவில் கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. தரையிலிருந்து 5 அடி உயரத்தில் அமைத்துள்ளாரகள். மலைக்குச் செல்லும் படிவரிசையின் இடப்புறம் குன்றின் கிழக்குச்சரிவில் அகழப்பட்டுள்ள இம்மண்டபக் குடைவரையை அடைய ஏழு படிகள் உதவுகின்றன. குடைவரையின் நீளம் 221/2 அடி, அகலம் 17 அடி, உயரம் 9 அடியாக உள்ளது.
குடைவரையின் மண்டபம் முகப்புத் தூண்களுக்கும், கருவறைக்குமிடையே அமைந்துள்ள மற்றொரு தூண் வரிசையால் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இக்கோவிலில் முகமண்டபம், அர்த்தமண்டபம், கருவறை காணப்படுகிறது. மகாமண்டபம் மற்றும் அர்த்தமண்டபத்தில் நான்கு முழுமைத்தூண்களும், நான்கு அரைத்தூண்களும் காணப்படுகின்றன. நான்கு முழுமைத்தூண்களிலும் சதுரம், கட்டு, சதுரம் வடிவம் உள்ளது. மீதமுள்ள நான்கு அரைத்தூண்கள் வெறுமையாக உள்ளது. தூண்களின் மேலுள்ள எளிய, கனமான போதிகைகள் உத்திரம் தாங்க மேலே வாஜனம் ஓடுகிறது. கூரையும், சுவர்களும் ஒரே சீராக சமன் செய்யப்பட்டுள்ளன.
கருவறையின் நீளம் 8 அடி, அகலம் 7 அடி. அர்த்தமண்டபத்தில் 2 அடி உயரத்தில் கருவறை அமைக்கப்பட்டுள்ளது. கருவறையின் முகப்பில் இரண்டு துவார பாலகர்களும், கருவறையில் பாதபந்த அதிஷ்டானமும் காட்டப்பட்டிருக்கிறது. 
கருவறையில் பிற்காலத்தை சேர்ந்த ஆவுடையார் லிங்கம் வைக்கப்பட்டுள்ளது.
முகமண்டபத்தின் கிழக்குப்பகுதியின் வடசுவரிலும், தென்சுவரிலும் பெரிய கோட்டங்கள் அகழப்பட்டுள்ளன. அக்கோட்டங்களில் நின்றநிலைக் காவலர்களின் சிற்பங்கள் அகழப்பட்டுள்ளன.
        
படம்: வடதிசை காவலர் மற்றும் தென்திசை காவலர் 
கருவறையின் வடபுறச் சுவரில் மகா விஷ்ணுவும், தென்புறச் சுவரில் நான்முகனும், நின்றபடி காட்சியளிக்கின்றனர். 
மகா விஷ்ணு

 நான்முகன்
முகமண்டபத்து வடபுறத்து முழுத்தூண் மேற்சதுரத்தின் கிழக்கு முகத்தில் மிகவும் சிதைந்த நிலையில் உள்ள நரசிம்மப் பல்லவரின் (மாமல்லன்)  கல்வெட்டு ஒன்று உள்ளது. திருக்கழுக்குன்றம் வேதகிரீசுவரர் என்று அறியப்படும் ஸ்ரீ மூலத்தானத்துப் பெருமானடிகளுக்கு வழிபாட்டுப்புறமாக வாதாபிகொண்ட   நரசிங்க போத்தரையர் நிலம் வைத்தமை என்று இக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொடிக்கால் மண்டபம் - மகாபலிபுரம்
கொடிக்கால் மண்டபம்  மகேந்திரவாடியில் உள்ள பெருமாள் கோவிலின் அளவு, வேலைப்பாடு முதலியவற்றைக் கொண்டதாகும். முகப்பு, மண்டபம், கருவறை, காவற்பெண்டுகளின் சிற்பங்கள், கல்வெட்டுகளை கொண்டு விளங்குகிறது இக்குடைவரை. இக்குடைவரையிலுள்ள காவற்பெண்டுகளின் சிற்பங்கள் மாமல்லபுரம் சிற்பங்கள் மாமல்லபுரம் பெருவராகர் குடைவரை, கொற்றவை ஒரகல் தளி இவற்றில் காணப்படும் காவற்பெண்டுகளின் சிற்பங்களை ஒத்துள்ளன.  
வாயிற்காவலர் நிலையிற்றான் சிறிது வேறுபாடு காணப்படுகிறது. மகேந்திரவாடியில் உள்ள வாயிற்காவலர் இரண்டு கைகளை உடையவர்; நின்ற நிலையினர்; முன்புறம் நோக்கியவர். கொடிக்கால் மண்டபத்தில் உள்ள வாயிற் காவலர் பெண்கள். அக்கோவில் துர்க்கையின் கோவிலாதலால் கொற்றவை குடைவரை என்றழைக்கப்படுகிறது. 
வாயிற்காவல பெண்களின் பிற அமைப்புகள் (ஆண்) வாயிற்காவலர் அமைப்புகளையே ஒத்துள்ளன. ஒருவர் கையில் தடியும், மற்றவர் கையில் வில்லும் இருக்கின்றன. ஆனால் இருவரும் முன்புறம் நோக்கியே இருத்தல் கவனித்தற்குரியது. பிற்காலப் பல்லவர் அமைத்த வாயிற்காவலர் உருவங்கள் பக்கங்களில் பார்வையைச் செலுத்தியபடி இருத்தலைக் காணலாம். கொடிக்கால் மண்டபக் கூரையைத் தாங்கியுள்ள கற்தூண்கள் இரண்டும் மகேந்திரவர்மன் காலத்து வேலைப்பாட்டைக் கொண்டுள்ளன. இறை உறை உட்கோவிலின் தரை, மண்டபத்தரையை விட இரண்டடி உயரமாக அமைக்கப்பட்டுள்ளது. படிக்கட்டுகளை உடையது. முதற் படிக்கட்டு மகேந்திரவாடியில் உள்ள கோவிற் படிக்கட்டைப்போல அரைமதி அளவினதாக இருக்கின்றது. இவ்விரண்டு கோவில்களின் எல்லாக் குறிப்புக்களையும் ஒத்திட்டுப் பார்ப்பின், இவை இரண்டும் ஒரே அரசன் காலத்தில் குறிப்பிட்ட கல் தச்சரைக் கொண்டே அமைக்கப் பட்டவை என்பது தெளிவாகும். இக்கோவில் தூண் கல்வெட்டின் முதற் பாதியை (வாம) ராஜசிம்மரின் விருதுபெயர் உள்ளது. அதனால் சிலர் இக்கோவிலை ராஜசிம்மர் காலத்தது என்றும், சிலர் மகேந்திரவர்மன் காலத்தது என்றும் கருதுகின்றனர்.

நரசிம்ம குடைவரை கோவில்சிங்கப்பெருமாள் கோவில் 
இக்கோவில் காஞ்சிபுரம் மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் என்னும் ஊரில் உள்ளது. இக்கோவிலில் உள்ள மூலவர்  பாடலாத்திரி நரசிம்மர் ஆவார். அதனால் இக்கோவிலை பாடலாத்திரி நரசிம்ம கோவில் என்றும் அழைக்கின்றனர்.  
பாடலம் என்றால் சிவப்பு, அத்ரி என்றால் மலை என்று பொருளாகும். நரசிம்மர் கோபக்கனலாக சிவந்த கண்களுடன் இம்மலையில் தரிசனம் தந்தால் பாடலாத்ரி என இவ்வூருக்கு பெயர் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மூலவர் பாடலாத்ரி நரசிம்மர் ஆவார். மூலவர் சன்னதியின்கீழ் உள்ள விமானம் பிரணவ கோடி விமானம் எனப்படும்.
நாம் அனைவரும் முக்கண்ணுடைய எம்பெருமான் சிவபெருமானை தரிசித்திருப்போம். ஆனால் இத்திருத்தலத்திலோ ஸ்ரீ நரசிம்ம பெருமாள் முக்கண்ணுடையவராய் காட்சி தந்து அருள்பாலிக்கிறார். நரசிம்ம அவதார காலத்தில் இக்கோவிலை சுற்றி பெரிய ஆரண்யம் (காடு) இருந்ததாகவும்,  அக்காட்டில் ஜாபாலி என்னும் மஹரிஷி தவம் செய்து கொண்டிருந்ததாகவும், அவரது வேண்டுகோளுக்கிணங்க,  ஸ்ரீ நரசிம்ம பெருமாள் இரண்யனை வதம் பண்ணியவுடன் உக்ர நரசிம்மரா (அதாவது கோப மூர்த்தியாக) காட்சி கொடுத்ததாக வரலாறு கூறுகிறது. இக்கோவிலில் உள்ள நரசிம்மர் வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்ட நிலையில் மிகப்பெரிய மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். நரசிம்மரின் இத்தகைய கோலத்தை காண்பது அரிது.

தாயார் அஹோபிலவல்லி மற்றும்  ஆண்டாள் சன்னதிகள் கிழக்கு நோக்கியும், லட்சுமி நரசிம்மர் சன்னதிகள் தெற்கு நோக்கியும் அமைந்துள்ளன. கருடன், ஆஞ்சநேயர் தனித்தனி சன்னதிகளும் உள்ளன கோயில் முகப்பில் பெருமாளின் தசாவதாரக்காட்சிகள் சுதை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. 12 ஆழ்வார்களும் இத்தலத்தில் மூலவராகவும், உற்சவராகவும் உள்ளனர்.
மூலவர் குன்றுக்குள் இருப்பதால் இவ்வாலயத்தைக் குடவரைக் கோயில் என்பர்.  இது பல்லவர் கால குடைவரைக் கோயிலாகும். ஆனால் யார் காலத்தது என்று சரியாக அறியமுடியவில்லை

ரங்கநாத குடைவரை கோவில்- சிங்கவரம்


விழுப்புரத்தில் இருந்து சுமார் 46 கிலோ மீட்டர் தொலைவில் செஞ்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது அருள்மிகு சிங்கவரம் பெருமாள் திருக்கோவில். 
சிங்கவரம் குன்றில் ரங்கநாதர் குடிகொண்டுள்ளார். செஞ்சியை ஆண்ட ராஜா தேசிங்குவின் குலதெய்வம் இந்த ரங்கநாதர். பெருமாளே நேரடியாகப் பேசும் அளவுக்கு ராஜா தேசிங்கு பெருமாளின் தீவிர பக்தர். ஒருமுறை ராஜா தேசிங்கு போருக்குச் செல்லவேண்டாம் என்று பெருமாள் சொல்லியும் போருக்குச் சென்றதால் பெருமாள் கோபம் கொண்டு தெற்கு நோக்கி முகத்தைத் திருப்பிக் கொண்டதாகச் சொல்கிறார்கள். மேலும் தென்திசை தெய்வமான யமனை எச்சரிக்கும் விதமாகவும் பெருமாள் இப்படி திரும்பியுள்ளார் என்கிறார்கள்.
இக்கோவில் மகேந்திரவர்ம பல்லவன் காலத்தில் கட்டப்பட்டு பின்பு குலோத்துங்க சோழன் மற்றும் விஜயநகர பேரரசால் புணரமைக்கப்பட்டது என்று கூறுகிறார்கள். மகேந்திரவர்மரின் தந்தையான ஸ்ரீசிம்மவிஷ்ணுவின் காலத்தில் அவரது செஞ்சி  அரண்மனைத் தோட்டத்தில் பூத்த மலர்களை ஒரு வராகம் தின்று கொண்டிருந்ததாம். இதனால் ஆத்திரமான அரசர் அதை விரட்டிச் செல்ல, அது இந்த மலையின் மீது ஏறி மறைந்ததாம். அப்போது இங்கே பள்ளி கொண்டிருந்த ரங்கநாதரை தரிசித்து பேறுபெற்றாராம் சிம்மவிஷ்ணு. இதனாலேயே இந்த ஊருக்கு சிம்மாசலம் என்று அவரது மகன் மகேந்திரவர்மன் பெயரிட்டாராம்.
இந்த குடைவரைக் கோயில் தென்னிந்தியக் கோயில் கட்டடக் கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது. ரங்கநாத பெருமாள் 24 அடி நீளத்திற்கு பள்ளி கொண்டுள்ளார்.  அவரும்,  அவர் பள்ளியறையும் ஒரே கல்லில் வடிக்கப்பட்டவை.

கருவறையில் பெருமாள் சயன கோலத்திலும், முகப்பில் ஸ்ரீதேவி, பூதேவியுடனும் பெருமாள் அருள்பாலிக்கிறார்.

தர்மராஜ மண்டபம்- மகாபலிபுரம் 
மாமல்லபுரம் தர்மராஜ மண்டபம் எனப்படுவது, மாமல்லபுரத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள பாறையின் கிழக்குப் பார்த்த முகப்பில் அமைந்துள்ள குடைவரை ஆகும். இதற்கு அத்தியந்தகாம பல்லவேச்சுர கிருகம் என்ற பெயரும் உண்டு. இது பாதையில் இருந்து உயரத்தில் உள்ளதால் இதை அடைவதற்குப் படிகள் அமைக்கப்பட்டுள்ளன. 
இங்குள்ள மண்டபத்தில் இரண்டு வரிசையில் தூண்கள் உள்ளன. ஒவ்வொரு வரிசையிலும் இரண்டு முழுத்தூண்களும், பக்கச் சுவரை அண்டி இரண்டு அரைத் தூண்களும் உள்ளன. முழுத்தூண்கள் மேலும் கீழும் சதுரக் குறுக்குவெட்டு முகம் கொண்டனவாகவும், நடுப்பகுதி எண்கோணப்பட்டை (சதுரம்-கட்டு-சதுரம்) அமைப்புக் கொண்டதாகவும் காணப்படுகின்றன. பின்பக்கச் சுவரில் மூன்று கருவறைகள் குடையப்பட்டுள்ளன. நடுவில் உள்ள கருவறை சற்றே அளவில் பெரியது. நடுக் கருவறையின் முகப்புச் சுவர் சற்று முன்புறம் துருத்தியபடி உள்ளது. இதன் வாயிலின் இருபுறமும் வாயிற் காவலர்களின் புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. கருவறைகளில் சிற்பங்கள் எதுவும் காணப்படவில்லை. நடுக் கருவறையில் சிவனும், ஏனைய இரண்டிலும் நான்முகனும் திருமாலும் இருந்திருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது. நான்முகனுக்குப் பதிலாக ஒரு கருவறையில் முருகனை வைத்து வணங்கியிருக்கலாம் என்ற கருத்தும் உண்டு.
இக்குடைவரையில் ஒரு வடமொழிக் கல்வெட்டுக் காணப்படுகிறது. இக்கல்வெட்டு இக்கோயிலின் பெயர் "அத்தியந்தகாம பல்லவேஸ்வர கிருகம்" எனக் குறிப்பிடுகிறது. "அத்தியந்தகாமன்" என்னும் பெயர் முதலாம் பரமேசுவரவர்மனைக் குறிக்கும் என்றும், இக்கல்வெட்டில் இதே மன்னனுக்கு உரிய விருதுப்பெயர்களான சிறீநிதி, சிறீபரன், ரணசெயன், தாருணாங்குரன், காமராசன் போன்றனவும் உள்ளதால் இது முதலாம் பரமேசுவரவர்மன் காலத்தது என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆனாலும் இதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. இதன் கலைப்பாணி பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலக் கலைப்பாணியை ஒத்திருப்பதால் இக்குடைவரை மகேந்திரவர்மன் காலத்தது என்று சிலர் கருதுகின்றனர்.

அதிரனாச்சந்த குடைவரை கோவில்-  சலுவான்குப்பம் 
இக்கோவில் மகாபலிபுரம் - சென்னை சாலையில் சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சலுவான்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ளது. 
அதிரனாச்சந்த குகைக் கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இதன் தளவமைப்பு 28 அடி நீளமும், 6 அடி அகலமும் கொண்டது, இதன் உயரம் 6.5 அடி. பாறை முகத்தில் செதுக்கப்பட்ட முகப்பில் இரண்டு தூண்கள் மற்றும் இரண்டு தூண்கள் சுவரை ஒட்டி அமைந்துள்ளன. கோவிலின் முழு தூண்கள் மகேந்திரவர்ம பாணியான சதுரம்-கட்டு-சதுரம் வடிவில் காணப்படுகிறது. இக்கோவிலில் முக மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை காணப்படுகிறது. 



கோவிலில் இரண்டு சிவலிங்கம் காணப்படுகிறது. மண்டபத்தின் வெளியே நந்தியின் முன் லிங்கமாகவும், கருவறையில் சுவயம்புலிங்கமாகவும் ஈசன் காட்சிதருகிறார். கருவறையை பாதுகாக்க இரண்டு துவாரபாலகர்கள் உள்ளனர். அர்த்தமண்டபத்தில் சிற்பங்கள் காணப்படுகின்றன. மண்டபத்தின் வெளியே மகிஷாசுரமர்த்தினி சிற்பமும், இரண்டு கல் நந்தியும் காணப்படுகிறது.  
கோவிலின் சுவர்களில் கல்வெட்டுகள் காணப்படுகிறது. தேவநாகரி, பல்லவ கிரந்த மற்றும் வட்டெழுத்து கல்வெட்டுகள் உள்ளன. இக்கோவிலின் அருகில் பல பாறைகள் காணப்படுகின்றன. அதில் மெழுகு பாறை அழகுமிக்கதாகும். 

சிகாரி பல்லவேஸ்வர குடைவரை கோவில்- மேலச்சேரி
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியிலிருந்து வடமேற்கே 5-கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது மேலச்சேரி.
மிருதங்க பர்வதம் என்னும் மத்தள மலையின் நடுவே குடையப்பட்டு குடவரைக் கோயிலாக இச்சிவாலயம் அமைக்கப் பட்டுள்ளது. மத்தள மலையின் மையத்தில் இறைவன் அருள்பாலிப்பதால் இவருக்கு மத்தளேஸ்வரர் என்ற திருப்பெயர் வழங்குகிறது
தமிழகத்தில் எண்ணற்றக் குடைவரைக் கோயில்களை உருவாக்கிய பெருமை விசித்திரசித்தன் என்று வர்ணிக்கப்பட்ட முதலாம் மகேந்திரவர்ம பல்லவனுக்கே உண்டு. கி.பி.7ம் நூற்றாண்டில் தொண்டை நாட்டின் பெரும் பகுதியை ஆட்சிபுரிந்தவன் இவன். அவனது வம்சாவளியில் வந்த சிங்கபுரத்து சந்திராதித்தியன் என்பவன் இங்கு குடைவரைக் கோயிலைக் கட்டி ஸ்ரீ சிகாரி பல்லவேஸ்வரம் என்று பெயரிட்டுள்ளான்.
இம்மன்னன் காலத்து கிரந்த எழுத்துக்கள் கொண்ட கல்வெட்டு ஒன்று இங்கு காணப்படுகிறது. சிவாலயம் அமைத்திட்ட மன்னன் இத்தலத்துக்கு அருகே நாம் மேலே பார்த்த சிங்கவரம் ரங்கநாதர் ஆலயத்தையும் குடைவரைக் கோயிலாக அமைத்துள்ளான். இவ்விரு குடைவரை ஆலயங்களும் சைவ-வைணவ ஒற்றுமையை செவ்வனே பறைசாற்றுகின்றன.
ஆலயத்தின் வெளியே ஏரியில் நீராழி மண்டபம் உள்ளது. முன்புறம் பிற்காலத்தில் கட்டப்பட்ட கல்மண்டபம் ஒன்றும் காணப்படுகிறது. சன்னதிக்கு நேராக பதினெட்டு அடி உயரம் கொண்ட கல்லால் ஆன தீபஸ்தம்பம் உள்ளது. சதங்கை மாலையணிந்து, கால்களை மடக்கி அமர்ந்தபடி கம்பீரமாகக் காட்சியளிக்கிறார் நந்திதேவர். இவரின் கீழே சிவலிங்கம் ஒன்றும் அரிதாய்க் காணப்படுகின்றது. 
மகா மண்டபம், இடை மண்டபம், கருவறை என்கிற அமைப்பில் அமைக்கப்பட்டுள்ளது இந்தக் குடைவரைக் கோயில். கருவறையில் ஐந்து அடி உயரம், கொண்ட பாணமும், ஏழு அடி சுற்றளவில், எட்டுக் கோணத்தில் ஆன ஆவுடையாரும் கொண்ட அற்புத லிங்கத் திருமேனியராக அருடகாட்சி அளிக்கிறார் மத்தளேஸ்வரர். கருணாகரப் பெருமானின் கம்பீர தோற்றம் கண்டு மனம் பூரிப்படைகின்றனது. கருவறையின் விதானத்தில் தாமரை மலர் ஒன்று அழகுற புடைக்கப்பட்டுள்ளது.
பைரவர், சண்டிகேஸ்வரர், விஷ்ணு பாதம் ஆகிய சிலரூபங்களும் இங்கு காணப்படுகின்றன. அற்புதமான ஆலயம் எனினும் காலக்கரங்களால் சிதைக்கப்பட்டுள்ளது.

காலம் III
காலம்-3ல் மகேந்திரவர்மனின் பாணி குறைய தொடங்கியது. மகேந்திரவர்ம
ன் காலத்து கடைசி கோவிலான கீழ்மாவிலங்கை பற்றி பார்ப்போம்.
கீழ்மாவிலங்கை குடைவரை கோவில் 
கீழ்மாவிலங்கைக் குடைவரை, தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் வட்டத்தில் உள்ள கீழ்மாவிலங்கை எனப்படும் ஊரில் காணப்படும் ஒரு குடைவரை ஆகும்.  திண்டிவனத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் இவ்வூர் உள்ளது.
இக்குடைவரை திருமாலுக்கான குடைவரை ஆகும். இவ்வூரில் உள்ளமக்கள் இக்கோவிலை "முகரப் பெருமாள் கோயில்" என்று அழைக்கிறார்கள்.
இது மிகச் சிறிய குடைவரை. இதுவரை அறியப்பட்டவற்றுள் தொண்டை மண்டலத்தில் உள்ள மிகச் சிறிய குடைவரை இது என்று கூறப்படுகின்றது. இக்குடைவரையில் தூண்கள் எதுவும் இல்லை. இதன் பின் சுவரில் நிற்கும் நிலையில் திருமாலின் புடைப்புச் சிற்பம் உள்ளது. முகப்பில் குடைவின் இரு பக்கங்களிலும் வாயிற்காவலர் புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. இச்சிற்பங்கள் பண்பட்ட அமைப்புக் கொண்டவை அல்ல. 
இக்குடைவரை முடிக்கப்படாத குடைவரையாக காட்சியளிக்கிறது.

மாமல்லன் பாணியை அடுத்த பகுதியில் பார்ப்போம்.....

Comments

Popular posts from this blog

Todas | Nilgiri Tribes

Pallava art and architecture | பல்லவர்களின் கலை மற்றும் கட்டிடக்கலை | பல்லவர்களின் கோவில்கள்- Part 1

முற்கால முதல் மன்னன் | சிம்மவர்மன் | Early Pallavas | Simhavarman