Pallava art and architecture | பல்லவர்களின் கலை மற்றும் கட்டிடக்கலை | பல்லவர்களின் கோவில்கள்- Part 1

பல்லவர்களின் கலை மற்றும்  கட்டிடக்கலை 

பல்லவர்கள் தென்னிந்திய கலை மற்றும் கட்டிடக்கலைக்கு முன்னோடிகளாக திகழ்ந்தனர். பல்லவர்களின் கட்டிடக்கலை திராவிட கட்டிடக்கலை பாணியின்  பிற்போக்கு வளர்ச்சியை நிரூபிக்கின்றது. 
செங்கல், மரம், உலோகத்தை பயன்படுத்தாமல் பாறைக்கட்டிடக்கலையை தமிழகத்திற்கு அறிமுகம் செய்தவர்கள் பல்லவர்களே. பல்லவர்கள் கோவிலை கட்டவும், சிற்பங்களை செதுக்கவும் கருங்கல்லை பயன்படுத்தியுள்ளனர். எனவே தான் அவை இன்றளவும் நிலைத்திருக்கின்றன. பல்லவர்களின் கட்டிடக்கலை முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் தொடங்கி படிப்படியாக வளர்ச்சி அடைந்தது.
                                                                        
பல்லவர்களின் கட்டிடக்கலையை மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தலாம்.
1. குடைவரைக் கோவில்கள் (Cave Temples)
      (அ) மகேந்திரவர்மன் பாணி
                  காலம் I
                  காலம் II
                  காலம் III
      (ஆ) மாமல்லன் பாணி    
2. ஒற்றைக்கல் கோவில்கள் (Monolithic Temples)
3. கட்டுமானக் கோவில்கள் (Structural Temples)

பல்லவர்களின் கோவில்கள்
1. குடைவரைக் கோவில்கள் (Cave Temples)
மகேந்திரவர்மன் பாணி
பல்லவர் கால குடைவரைக் கோவில்களை மகேந்திரவர்மன் பாணி என்று கூறுகிறோம். இவரது ஆட்சி காலத்தில் கற்பாறைகளை குடைந்து குடைவரைக்கோவில்கள் அமைக்கப்பட்டன. கருங்கல்லைத் தவிர வேறு கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்தாமல் இக்கோவில்கள் அமைக்கப்பட்டன. கட்டிடக் கலைத் துறையில் இது ஒரு புதுமையாகும். குடைவரைக் கோவிலில் கருவறை அமைந்துள்ளது. கருவறையின் சுவர்களில் அழகான சிற்பங்கள் காணப்படுகின்றன. தமிழகத்தின் பல பகுதிகளில் பல்லவர்கால குடைவரைக் கோவில்களை காணலாம்.

காலம் I

இலக்ஷிதாயனம் குடைவரைக் கோவில் -  மண்டகப்பட்டு

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மண்டகப்பட்டு என்னும் ஊரில் இக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில்  முக மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை காணப்படுகிறது. சதுர வடிவம் கொண்ட  நான்கு முழு தூண்களும், நான்கு அரை தூண்களும் காணப்படுகின்றன. நான்கு முழு தூண்களும் சதுரம், கட்டு, சதுரம்  வடிவில் காணப்படுகிறது. அந்த தூண் ஒன்றில் சமஸ்கிருத கல்வெட்டு காணப்படுகிறது. அதில் மரம், செங்கல், உலோகம், சுதை இவையில்லாமல் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகியோர்க்கு விசித்திரசித்தனால் அமைக்கப்பட்ட  இலக்ஷிதாயனம் கோவில் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. விசித்திர சித்தன் மற்றும் இலக்ஷிதன் மகேந்திரவர்மனின் பட்டப்பெயர்களில் ஒன்றாகும். லக்ஷித என்றால் குறிக்கோள்களை உடையவன், தலைசிறந்த நோக்கங்களை உடையவன் என்று பொருளாகும்.
குடைவரை கோவிலின் இருபக்கங்களிலும் துவார பாலகர்கள் அமைதியான மற்றும் சிரித்த முகத்தோடு வடிவமைக்கப்பட்டிருக்கிறார்கள். இக்கோவில் வடக்கு நோக்கி உள்ளது. கோவிலின் முன் ஏரி ஒன்று காணப்படுகிறது. குடைவரையின் பின் சுவரில் மூன்று கருவறைகள் உள்ளன. அவற்றில் இறைவன் திருமேனியை வைக்க ஏதுவாக குழிகளும் காணப்படுகின்றன. மேலும் கருவறை சுவரின் மேல் சுண்ணாம்பு பூசிய பூச்சு காணப்படுவதால், இறைவனின் வடிவங்கள் ஓவியங்களாகவும் தீட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. மகேந்திரவர்மனுக்கு சித்திக்கார புலி என்ற வேறு பெயர் உண்டு என்பது இங்கு நினைவு கூறத்தக்கது. பல்லவர்களின் முதல் குடைவரை கோவில் ஆகும். 

பஞ்ச பாண்டவ குடைவரை கோவில் - பல்லாவரம் 

பல்லாவரம் குடைவரை கோவில்  சென்னைக்கு அருகில் உள்ள பல்லாவரம் என்னும் ஊருக்குக் கிழக்கேயுள்ள மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இக்குடைவரை முதலாம் மகேந்திரவர்மன் காலத்தைச் சேர்ந்தது. தற்போது இதை முஸ்லீம்கள்  தர்காவாகப் பயன்படுத்தி வருகின்றனர். இந்தக் குடைவரை உயரமான இடத்தில் குடையப்பட்டதால் அதை அடைவதற்குப் படிகளும் அமைக்கப்பட்டுள்ளன. நுழையும் பகுதியில் ஒரு மேடை போன்ற அமைப்பும் அதற்கு அப்பால் மண்டபமும் அமைந்துள்ளது. மண்டபத்தினுள் இரண்டு தூண் வரிசைகள் உள்ளன. 
ஒவ்வொரு வரிசையிலும் நான்கு முழுத்தூண்களும், சுவரை அண்டி இரண்டு அரைத்தூண்களும் உள்ளன. மண்டபத்தின் பின்புறச் சுவரில் ஐந்து கருவறைகள் குடையப்பட்டு உள்ளன.  இக்குடைவரை இப்போது வேறு தேவைகளுக்குப் பயன்படுவதால், பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சில இடங்களில் புதிய கட்டுமானங்கள் காணப்படுவதுடன், தீந்தையும் பூசப்பட்டிருப்பதால் இதில் பழமையைக் காண முடியாமல் உள்ளது.

குடைவரை கோவில் - மாமண்டூர்
திருவண்ணாமலை மாவட்டத்தில் வெம்பாக்கம் வட்டத்தில் அமைந்துள்ளது மாமண்டூர் கிராமம். மாமண்டூர் குடைவரைகள் என்பன நரசமங்கலம் எல்லையில் 2 குடைவரைகளும் மாமண்டூர் எல்லையில் 2 குடைவரைகளும் ஆகும்.
இதில் இரண்டு குடைவரைகள் முற்று பெறாதவையாகவும், இரண்டு குடைவரைகள்  முற்று பெற்றவையாகவும் காணப்படுகிறது.

குடைவரை:1
குடைவரை 1 மற்றும் 2 முழுமை பெறாத குடைவரைகள் ஆகும்.

குன்றுத் தொடரின் தெற்கு மூலையில் கிழக்கு திசைப் பேரவையில் இக்குடைவரை குடையப்பட்டுள்ளது. மிக எளிமையான கட்டடக் கூறுகளை கொண்ட இக்குடைவரையை அணுக ஏதுவாக படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குடைவரைப் பணிகள் தொடங்கி முழுமை பெறாமல் இடையிலேயே கைவிடப்பட்டுள்ளன. இக்குடைவரையின் முகப்பில் இரண்டு முழுத்தூண்களும், தென், வடபுறங்களில் பகத்திற்கொன்றாக இரண்டு  அரைத்தூண்களும் உள்ளன.
முழுத்தூண்களில் முதல் தூணில் சதுரம், கட்டு, சதுரம்  என பிரிக்கும் பணி நிறைவுறாமல் கைவிடப்பட்டுள்ளது. இரண்டாவது முழுத்தூண் சதுரம், கட்டு, சதுரம் என்ற எவ்வித அமைப்பும் துவங்க பெறாமல் எளிமையாக விடப்பட்டுள்ளது. குடைவரையின் பின்புறச் சுவரில் மூன்று கருவறைகள் அமைக்கும் பணி துவங்கப்பட்டு அது நிறைவுறாது கைவிடப்பட்டுள்ளது.

குடைவரை:2

குன்றின் அடிவாரத்திலிருந்து குடைவரையைச் சென்றடைய படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குடைவரை கிழக்கு மற்றும் தெற்கு ஆகிய இரண்டு முகங்களிலும் குடையப்பட்டுள்ளது. கிழக்கு முகத்தில் குடைவுப் பணி முடிவடைந்த நிலையில் தென்முகப்பணி முடிவடையாமல் உள்ளது. இக்குடைவரை அமைந்துள்ள குன்றின் உச்சிக்கு செல்லும் படிக்கட்டுகள் முடிவடையும் இடத்தில ஒரு கற்றளியும், அதன் தென்புறத்தே சிறிது மேலே மற்றொரு கற்றளியும் அமைந்துள்ளன.
கிழக்கு நோக்கி அமைந்துள்ள இக்குடைவரை, முகப்பில் ஐந்து முழு தூண்களையும், முகப்பின் வட, தென் மூலைகளில் அரைத்தூண்களையும் கொண்டுள்ளது. வடபுறத்திலுள்ள அரைத்தூண் நான்முகமாக கட்டப்பட்டுள்ளது. இவ்வரைத்தூணை அடுத்து அமைந்துள்ள முழுத்தூண் சதுரம், கட்டு, சதுரம்  அமைப்பை கொண்டுள்ளது. இதனை அடுத்து அமைத்துள்ள மூன்று முழுத்தூண்களில் இரண்டு முழுமை பெற்றும், ஒன்று சதுரம், கட்டு, சதுரம்  அமைப்புகளின்றி நான்முகமாக விடப்பட்டுள்ளது. தென்புறத்திலுள்ள நான்முக அரைத்தூண் இக்குடைவரையின் கிழக்கு முகத்திற்கு தென் எல்லையாகவும், தென் முகத்திற்கு கிழக்கு எல்லையாகவும் செதுக்கப்பட்டுள்ளது. முகப்புத் தூண்கள் உத்திரத்தை தாங்கி நிற்கின்றன. 
இக்குடைவரையில் முகமண்டபம், அர்த்தமண்டபம், கருவறைகள் காணப்படுகின்றன. குடைவரையின் முகப்பிற்கும், முகப்பின் உட்புறத்தில் அமைந்துள்ள தூண் வரிசைக்கும் இடையே முகமண்டபம் காணப்படுகிறது. 
அர்த்தமண்டபம் கருவறைப் பகுதிக்கும், முகமண்டபத்தை அடுத்த வரிசைத் தூண்களுக்குமிடையே அமைந்துள்ளது. தூண்வரிசையின் மையப்பகுதியில் நான்கு முழுத்தூண்களும், பக்கவாட்டில் பகத்திற்கொன்றாக இரண்டு அரைத்தூண்களும் உள்ளன. 
அர்த்தமண்டபத்தில் பின் சுவரில் ஐந்து கருவறைகளும், பக்கச் சுவரகளில் இரண்டு கருவறைகளும் குடையப்பட்டுள்ளன. கருவறையின் கூரை சிறு உத்திரம் போன்று இழுக்கப்பட்டுள்ளது. இதற்க்கு மேல் கபோதக வளைவு வடிக்கப்பட்டுள்ளது. சுவர்களும், கூரையும் வெறுமையாக அமைந்திருக்கும்.இக்கருவறையில் கடவுள் சிலையமைக்க  ஆழமான குழியொன்று வெட்டப்பட்டுள்ளது. தென்சுவர்க் கருவறையின் முன் ஒரு படி வெட்டப்பட்டுள்ளது. முதல் மற்றும் மூன்றாம் கருவறை வாயில்கள் முன்னாள் சந்திரக்கல்லும், மேலே ஒரு படியும் அமைக்கப்பட்டுள்ளன. மற்ற மூன்று கருவறை வாயில்களுக்கும் சந்திரக்கல்லும், மேலே இரண்டு  படிகளும் அமைக்கப்பட்டுள்ளன. படிக்கட்டுகளின் இருபுறங்களையும் அணைத்தவாறு யானையின் துதிக்கை  போன்ற சுருட்டலுடன் சந்திரக்கல்லின் இருபுறமும் அமைந்துள்ளது.  உட்புறத்தில் வெறுமையாக காணப்படுகின்றன. கருவறையின் பின்சுவர்க்கு அருகில் நீளமான குழியொன்று வெட்டப்பட்டுள்ளது. 
இக்குடைவரையின் மேற்பறப்பு முழுவதும் சுதையெழுதி வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டிருக்க வேண்டும். காலப்போக்கில் அவை மறைந்து போனதால் ஆங்காங்கே அவற்றின் எச்சங்கள் குடைவரையில் உள்ளன. 

குடைவரை:3
குடைவரை 3 மற்றும் 4 முழுமைப்பெற்ற குடைவரைகள் ஆகும்.


மாமண்டூர் நரசமங்கள குன்றுத் தொடரினைப் பிரிக்கும் ஓடையின் வடபுறத்தேயுள்ள பெரிய பாறையொன்றின் முகப்பில் கிழக்கு நோக்கியவாறு இக்குடைவரை அமைந்துள்ளது. இக்குடைவரையின் வடக்கு தெற்கு சுவரில் முதலாம் பராந்தக மற்றும் ராசராச சோழர் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இக்கல்வெட்டில் இந்த குடைவரையினை உத்திரவாலீஸ்வரம் என்றும், இக்குடைவரைக்கு பின்னால் உள்ள ஏரியை சித்திரமேகதடாகம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
குடைவரையின் முன்புறம் இரண்டு அடுக்கு நடைப்பகுதியாக அமைந்துள்ளது. முன் தரையின் நடைபரப்பிற்கு உட்புறம் குடைவரையின் முகப்பில் நான்கு தூண்கள் குடையப்பட்டுள்ளன. அவற்றில் மையத்தூண்கள் இரண்டும் முழுத் தூண்களாகவும், வலது மற்றும் இடதுபுறத் தூண்கள் அரைத் தூண்களாகவும் அமைந்துள்ளன. அரைத்தூண்கள் நான்கு பக்கங்களையும், முழுது தூண்கள் சதுரம், கட்டு, சதுரம் அமைப்புகளோடும் உள்ளன.  தூண்களில் தாமரைப் பதக்கம் காணப்படுகின்றது. 

குடைவரை:4

தெற்கு வடக்காக நீண்டிருக்கும் மலைக்குன்றின் வடகோடியில் அமைந்துள்ளது. இக்குடைவரையின் முகப்பு இரண்டு முழுத்தூண்களும் இரண்டு அரைத்தூண்களும் கொண்டு அமைந்துள்ளது. பக்கங்களில் அமையப் பட்டுள்ள அரைத் தூண்கள் நான்முகத் தூண்களாகவும் இடையில் உள்ள தூண்கள் சதுரம், கட்டு, சதுரம் என்ற அமைப்பிலும் உருவாக்கப்பட்டுள்ளன. தூண்களில் தாமரைப் பதக்கங்கள் காணப்படுகின்றன. இப்பதக்கங்கள் மேல்புறத்தில் முக்கால் அளவிலும் கீழ்ப்புறத்தில் முழுமையாகவும் அமைந்துள்ளன. தூண்களின் மேல் எளிமையான போதிகைகள் அமைந்துள்ளன.
முகப்பிற்குப் பின் அமைந்துள்ள முகமண்டபம் சுமார் 6 மீட்டர் நீளமுடையது. இம்மண்டபத்தின் தெற்கு சுவரில் மகேந்திரவர்மனின் பட்டப்பெயர்களை கொண்ட பல்லவ க்ரந்தக் கல்வெட்டு காணப்படுகிறது.
பின்சுவரின் மையப்பகுதியில் ஒரு கருவறை காணப்படுகிறது. கருவறையில் இறை உருவங்கள் ஏதும் இல்லை.

கல் மண்டபம் குடைவரைக்கோவில் - குரங்கணில்முட்டம் 
திருவண்ணாமலை மாவட்டத்தில், செய்யாறு வட்டத்தில் குரங்கணில்முட்டம் என்னும் ஊர்  அமைந்துள்ளது. காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசிக்குச் செல்லும் வழியில் மாமண்டூருக்குச் சற்றுத் தொலைவில் குரங்கணில்முட்டம் உள்ளது. இக்குடைவரை பல்லவர் காலத்தைச் சேர்ந்தது எனச் சொல்வதற்குப் பல்லவர் காலக் கல்வெட்டுச் சான்றுகள் எதுவும் இங்கே கிடைக்கவில்லை. இது அமைந்துள்ள பகுதி இன்றும் பல்லவபுரம் என்று அழைக்கப்படுவதாலும், குடைவரை பல்லவருடைய கலைப்பாணியில் அமைந்துள்ளதாலும் இது பல்லவர் காலத்தைச் சேர்ந்தது எனக் கருதப்படுகிறது. எனினும் இக்குடைவரையில் இராட்டிரகூட மன்னன் கன்னரதேவன் காலக் கல்வெட்டுகள் சில உள்ளன. இவற்றிலிருந்து இது திருமாலுக்கு உரிய கோயில் எனக் கருதப்படுகிறது. 
இக்குடைவரை மண்டபத்தில் இரண்டு வரிசைகளில் தூண்கள் உள்ளன. ஒவ்வொரு வரிசையிலும் இரண்டு முழுத்தூண்களும் சுவர்களை அண்டி இரண்டு அரைத்தூண்களும் காணப்படுகின்றன. மூன்று கருவறைகள் உள்ளது. ஒவ்வொன்றிற்கும் இரண்டு துவாரப்பாலகர்கள் என மொத்த ஆறு துவாரப்பாலகர்கள் உள்ளனர். பின்புறச் சுவரில் மூன்று கருவறைக் குடைவுகளும், பக்கச் சுவர்களில் பக்கத்துக்கு இரண்டாக நான்கு கருவறைக் குடைவுகளும் காணப்படுகின்றன. எனினும், பக்கச் சுவர்களில் காணப்படும் கருவறைகள் முற்றுப்பெறவில்லை.

குடைவரைக்கோவில் - வல்லம் 


வல்லம் குடைவரைக் கோயில்கள் செங்கல்பட்டு அருகே அமைந்துள்ள வல்லம் எனும் சிற்றூரில் அமைந்த மூன்று குடைவரைக்கோயில்களைக் குறிக்கும். இவற்றில் ஒன்று பெருமாளுக்கானது. 
முதல் குடைவரை வல்லம் வேதாந்தீசுவரர் திருக்கோயில் பல்லவர் காலத்தில் அமைந்த குடைவரைக்கோயில். மகேந்திரவர்மனின் பட்டபெயரான சத்ருமல்லன், குணபரண், பாகபிடுகு, லலிதாங்குரன் போன்ற பெயர்கள் இங்குள்ள கல்வெட்டில் காணப்படுகின்றன. இக்குடைவரையை வைத்திருந்தவன் மகேந்திரவர்மனின் அடியவரான வயந்தப்பிரியரசரின் மகன் கந்தசேனன் என்பதை இங்குள்ள கல்வெட்டிலிருந்து அறியமுடிகிறது.
இரண்டாம் குடைவரை திருவயந்தீஸ்வரம் ஆகும். சாதாரண குடிமகள் ஒருவலாள் எடுப்பிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் குடைவரையான ஸ்ரீ கரிவரதராஜப் பெருமாள் திருக்கோயில் பல்லவர் காலத்தில் அமைக்கப்பட்ட குடைவரைக்கோயில். இக்கோவில் கல்வெட்டில் "பல்லவ போத்தரையர் மகள்கொம்மை தேவகுலம்"  என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலிருந்து இக்கோவில் அரச குல பெண்ணொருத்தியான  "கொம்மை" என்பவளாள் கட்டப்பட்டுள்ளது என்று அறியலாம்.

மகேந்திர விஷ்ணு கிருகம் குடைவரைக்கோவில்-மகேந்திரவாடி

வேலூர் மாவட்டம் அரக்கோணம் வட்டத்தில் மகேந்திரவாடி என்னும் ஊர் உள்ளது. தன்னந்தனியாக கடந்த கல்லுக்கு அழகை கொடுத்துருக்கிறார் விசித்திர சித்தர். 
குடைவரையின் முன்புறம் இரண்டு அடுக்கு நடைப்பகுதியாக அமைந்துள்ளது. நான்கு முழுத்தூண்களும், நான்கு அரைத்தூண்களும் காணப்படுகிறது. நான்கு முழுத்தூண்களும் சதுரம், கட்டு, சதுரம் வடிவில் காணப்படுகிறது. மீதமுள்ள நான்கு அரைத்தூண்களில் சதுரம், கட்டு, சதுரம் என எவ்வித அமைப்பும் இல்லாமல் எளிமையாக உள்ளது. கோவிலின் முன்புற தூண்களில் தாமரை பதக்கங்கள் காணப்படுகின்றன. ஆனால் பின்புற தூண்களில் காணப்படவில்லை.
இக்குடைவரை கோவில் திருமாலுக்காக எடுக்கப்பதாகும். இக்கோவிலில் உள்ள தென்புறத்தூண்  கல்வெட்டில் குணபரண் என்பவர் மகேந்திரபுரத்தில், மகேந்திர தடாக கரையில் மகேந்திர விஷ்ணு கிருகம் என்னும் இக்கோவிலை முராரி என்னும் இறைவனுக்காகவும், மக்கள் கண்டுகளியவும் எடுவிக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.
முகப்பை தாண்டி உள்ளே சென்றால் முகமண்டபம், அர்த்தமண்டபம், ருவறை காணப்படுகிறது. முகமண்டபத்தின் கூரையும், தரையும் கட்சிதமாக மேடு பள்ளமின்றி காணப்படுகிறது. இருபக்க சுவர்களில் எந்த வேலைப்பாடுகளும் இல்லை. இரண்டாம் வரிசை தூண்களுக்கும், கருவறைக்கும் இடையே அர்த்தமண்டபம் காணப்படுகிறது. முகமண்டபத்தை போலவே கூரையும், தரையும் சமமாக உள்ளது. அர்த்தமண்டபத்தின் பின் சுவரில் கருவறை காணப்படுகிறது. கருவறையை பாதுகாக்க இரண்டு துவராக பாலகர்கள் உள்ளனர். கருவறையில் பின்னாளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட நரசிம்மரின் மூர்த்தம் ஒன்று உள்ளது.

லலிதாங்குர பல்லவேஸ்வர கிருஹம்  - திருச்சிராப்பள்ளி

கங்காதரர்

இந்தக் குடைவரைக் கோயில் மட்டுமே பல்லவர்களின் தலைநகரிலிருந்து வெகுதொலைவு விலகி, சோழ மண்டலத்தில் காவிரியாற்றங்கரையில் அமைக்கப்பட்டிருக்கிறது. தன்னுடைய தந்தை சிம்ம விஷ்ணுவிடமிருந்து மரபுரிமையாகப் பெற்ற பல்லவப் பேரரசின் எல்லையானது, சோழ மண்டலம் வரையிலும் விரிந்திருந்ததால் இங்கேயும் ஒரு குடைவரையை மகேந்திரவர்மன் அமைத்திருக்கிறான் எனப்படுகிறது. குடைவரைக்குள் சுவரிலும் தூண்களிலும் வட மொழியிலும் தமிழிலும் பல கல்வெட்டுகள் இருக்கின்றன.
லலிதாங்குரன் என்பது மகேந்திரவர்மனின் மற்றொரு பெயராகும். இக்குடைவரைக் கோவில் சிவனுக்காக அமைக்கப்பட்டதாகும். ஆனால், இப்பொழுது இங்கு வழிபாடு இல்லை, குகைக் கோவிலின் கிழக்குப் பகுதியில் வெற்றிடமாக உள்ள அறையில் முன்பு லிங்க வழிபாடு நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேற்புறச்சுவரிலுள்ள ‘கங்காதரர்’ சிற்பக் காட்சி பல்லவர்காலச் சிற்பக் கலைத்திறனுக்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டாக விளங்குகிறது. இக்கோவிலின் கவர்களிலுள்ள கல்வெட்டுகள் பல முக்கிய வரலாற்றுச் செய்திகளைத் தெரிவிக்கின்றன. அவற்றுள் குறிப்பிடத்தக்க ஒன்று, மன்னன் மகேந்திரவர்மன், சைவ சமயக் குரவர் அப்பர் முயற்சியினால் சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாறியதைக் கூறும் கல்வெட்டாகும். 
இக்குடைவரை கோவில் இரண்டு அடுக்கு நடைபாதையை கொண்டது. எட்டு முழுத்தூண்களை கொண்டது. தூண்கள் சதுரம், கட்டு, சதுரம் வடிவில் காணப்படுகிறது. இதில் முன்புற நான்கு தூண்களில் மட்டுமே தாமரை பதக்கங்கள் காணப்படுகின்றன. முகப்பு மண்டபம் பெரியதாகவும், அர்த்தமண்டபம் மிக சிறியதாக காணப்படுகிறது.

சத்ருமல்லேசுவரர் குடைவரைக் கோவில் -தளவானூர் 
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி – மண்டகப்பட்டு எனும் ஊர்களுக்கு இடையே அமைந்த தளவானூரில்  இக்குடைவரை அமைந்துள்ளது. சத்ருமல்லன் என்ற பெயர் மகேந்திரவர்மனின் பட்டப்பெயர்களில் ஒன்றாகும்.
முகமண்டபத் தூண்கள் சதுரம், கட்டு, சதுரம் வடிவில் காணப்படுகிறது. தூண்களின் சதுரப்பகுதியில் தாமரை பதக்கங்கள் காணப்படுகின்றன. முகமண்டபத்தை அடுத்து அழகிய கருவறை அமைந்துள்ளது. கருவறையில் சிவலிங்கத்திருமேனி காட்சி அளிக்கிறது.


குடைவரையின் நுழைவாயிலின் மேலே கபோத அமைப்பும், தூண்கள் மீது திருவாசி எனப்படும்  மகரத்தோரணம் செதுக்கப்பட்டுள்ளது. அஃது இரு பக்கங்களிலும் உள்ள மகரமீன்களின் வாய்களிலிருந்து வெளிப்பட்டு நடுவில் உள்ள ஒரு சிறிய மேடையில் கலக்கின்றது. அம்மேடைமீது கந்தர்வர் இருக்கின்றனர். மகரமீன்களின் கழுத்து மீதும் அவர்கள் காண்கின்றனர். திருவாசியில் இரண்டு வளைவுகள் காண்பதால் அதனை ‘இரட்டைத் திருவாசி’ என்பர். இந்த ஆலயத்தின் நுழைவாயிலில் காணப்படும் மகரதோரணம் வேறு எந்தக் குடைவரை கோயிலிலும் காணமுடியாதது.



அவனிபாஜன பல்லவேஸ்வர கிருஹம்- சீயமங்கலம் 

மகேந்திரவா்மப் பல்லவனின் பட்டப் பெயா்களில் ஒன்றான `அவனிபாஜனன்’ என்ற பெயரால் இக்கோயில், `அவனிபாஜனன் குடைவரைக் கோயில்’ என்ற திருநாமத்துடன் வழங்கப்படுகிறது. இத்தலத்தில் உள்ள ஈசன் `தூண் ஆண்டாா்’ என்றும் ஸ்தம்பேஸ்வரா் என்றும் வழங்கப்படுகிறாா்.
இக்குடைவரையில் முகமண்டபம், அர்த்தமண்டபம் காணப்படுகிறது. தூண்கள் சதுரம், கட்டு, சதுரம் வடிவில் உள்ளது.

  
காலம் II அடுத்த பகுதியில் பார்ப்போம்...............
                                              



 









Comments

Popular posts from this blog

Todas | Nilgiri Tribes

முற்கால முதல் மன்னன் | சிம்மவர்மன் | Early Pallavas | Simhavarman