சோழர்களின் கோவில் | ஐராவதேஸ்வரர் கோவில்| CHOZHA TEMPLE| AIRAVATHESHWARAR TEMPLE| UNESCO SITE|
ஐராவதேஸ்வரர் கோவில்
சோழர்களின் வரலாறு மற்றும் அவர்களின் கலை நயத்தை அறிய அவர்கள் கட்டிய கோவில்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. அதில் பிற்கால அரசனான இரண்டாம் ராஜராஜ சோழனை பற்றி அறிய ஐராவதேஸ்வரர் கோவில் உதவியாக உள்ளது.
ஐராவதேஸ்வரர் கோவில் 12-ம் நூற்றாண்டில் பிற்கால சோழன் இரண்டாம் குலோத்துங்க சோழனின் மகனான இரண்டாம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது.
இக்கோவில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அருகில் உள்ள தாராசுரம் என்னும் ஊரில் உள்ளது. அழியாத சோழர் பெருங்கோவில்களில் இதுவும் ஒன்றாகும்.
கங்கைகொண்ட சோழபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த இரண்டாம் இராஜராஜன் அங்கிருந்து தனது தலைநகரைத் தாராசுரத்திற்கு மாற்றி, அங்கு கட்டிய கோயிலே ஐராவதேசுவரர் கோயிலாகும்.
கோவிலின் வேறு பெயர்கள்
- ஐராவதேஸ்வரர்
- ராஜராஜேஸ்வரம்
- தாராசுரம்
பெயர் காரணங்கள்
மகாலட்சுமி ஒரு முறை துர்வாச முனிவருக்கு ஒரு மாலையை பரிசாக அளித்தார். அதனை முனிவர் இந்திரனுக்கு கொடுத்தார். இந்திரனும் அந்த மாலையை வாங்கி தன் வாகனமான ஐராவதம் என்ற வெள்ளை யானையின் மீது வைத்தார். அந்த யானை மாலையைத் தரையில் போட்டு தன் காலால் மிதித்து விட்டது. இதை கண்ட துர்வாச முனிவருக்குக் கோபம் வந்தது. அந்த யானையை கோபத்தோடு பார்த்தார். “நான் கொடுத்த மாலையை அவமதித்த நீ, தேவலோகத்தில் இருக்க தகுதி இல்லை. காட்டு யானையாக பூலோகத்தில் சுற்றித் திரிய வேண்டும்.” என்று சாபம் அளித்தார். வெள்ளை உருவம் கொண்ட யானை கருமை நிறம் அடைந்தது. தன் நிறம் மாறியதால் வருத்தப்பட்ட யானையானது இத்தலத்திற்கு வந்து இங்குள்ள சிவபெருமானை வணங்கியதால் அதன் சாபம் நீக்கப்பட்டது. இதனால் தான் இங்குள்ள இறைவனின் பெயர் ஐராவதேசுவரர் என்று அழைக்கப்படுகிறது.
இராஜராஜன் எடுப்பித்த காரணத்தினால் இராஜராஜேஸ்வரம் என்றும் அழைக்கப்படுகிறது.
தேவர்களை எல்லாம் அழித்து, அசுரர்கள் இந்த உலகை ஆட்சி செய்ய வேண்டும் என்பதற்காக, மரணமற்ற வாழ்வினை பெற, தாரகாசுரன் என்ற அரக்கன் இந்த கோவிலில் இறைவனை பூஜித்து, தவம் இருந்து, தான் விரும்பிய அருளைப் பெற்றதால் இந்த இடம் தாராசுரம் என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
இசைப்படிகள் மற்றும் குளம்
நுழைவாயிலில் நந்தியினருகே அமையப்பெற்றிருக்கும் பலி பீடத்தின் படிகள் இசையொலி எழுப்பும் படிகளாக அமைக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு கனங்களிலிருக்கும் இந்த தூண்கள், தட்டும்போது சரிகமபதநீ என்ற சுரங்களைக் கொடுக்கின்றன.
எமதர்மன் சாபம் பெற்றதால் உண்டான உடல் எரிச்சல் தீர இங்குள்ள குளத்தில் நீராடி விமோசனம் பெற்றதால் இங்கு உள்ள குளம் எமதீர்த்தம் என அழைக்கப்படுகிறது.
கட்டிடக்கலை
ஐராவதேசுவரர் கோயில் திராவிட பாணியில் கட்டப்பட்டுள்ளது. தேர் வடிவிலமைந்த இக்கோயில் கரக்கோயில் என்ற வகையைச் சேர்ந்தது என்பதற்கான சான்றுகள் தமிழ் இலக்கியப் படைப்புகளில் காணப்படுகின்றன.
கோயிலின் முதன்மை நுழைவாயில் கிழக்குப்புறத்தே அமைந்துள்ளது. கோயில் விமானம் 80 அடி உயரங்கொண்டது.
கோவிலில் நுழைந்த உடனே காணப்படும் மண்டபம் நந்தி மண்டபம் ஆகும்.
ஐராவதேஸ்வரர் கோயிலின் ராஜ மண்டபம் எனப்படும் மகாமண்டபம் ஒரு பக்கம் இங்கு சாபம் நீங்கப்பெற்ற ஐராவதம் யானையாலும், மறுபக்கம் குதிரைகளாலும் இழுக்கப்படுவது போல கட்டப்பட்டுள்ளது. கோயிலின் முதன்மை நுழைவாயில் கிழக்குப்புறத்தே அமைந்துள்ளது.
சிற்பங்கள்
தஞ்சாவூர் பெரிய கோயில் மற்றும் கங்கைகொண்ட சோழீசுவரம் கோயில் இரண்டையும் விடச் சிறியதாக இருப்பினும் இக்கோயில் நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் மிகுந்ததாய் உள்ளது.
தமிழகத்தின் மிகச்சிறந்த சுவர்ச் சிற்பங்கள் இருக்கும் கோயில் என்று இதனை சொல்லலாம்.
தமிழகத்தில் இருக்கும் கோயில்களிலேயே இங்கு தான் அதிகளவிலான நுணுக்கமான வேலைப்பாடுகள் நிறைந்த சிற்பங்கள் இருக்கின்றன. இங்குள்ள தூண்களிலும், சுவர்களிலும் நாட்டிய முத்திரைகளும், தத்ரூபமான விலங்குகளின் உருவங்களும் தேர் போன்ற கற்சக்கரங்களும் இங்கே ஏராளமாக இருக்கின்றன.
ஐராவதேஸ்வரர் கோயிலில் வேறந்த கோயிலிலும் காணக்கிடைக்காத சிவபெருமானின் ரூபங்களாய் காணலாம். கிருஷ்ணனை போன்றே குழலூதும் சிவன், காலை மடக்கி ஓய்வாக உட்கார்ந்திருக்கும் சிவன் ஆகிய கோலங்களை நாம் இங்கே காண முடியும்.
ராஜகம்பீர திருமண்டபத்தில் ஒரு தூணுக்கு பன்னிரெண்டு காட்சிகள் என நான்கு தூண்களில் 48 கந்தபுராண காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
அர்த்தநாரீஸ்வரர், அகத்தியர், சரபமூர்த்தி, நரசிங்கமூர்த்தி, தட்சிணாமூர்த்தி, விஷ்ணு துர்க்கை, அண்ணபூர்ணி, சண்டிகேஸ்வரர், நர்த்தன விநாயகன், கண்ணப்பர், வீணையில்லாத சரஸ்வதி போன்றவர்களையும் துல்லியமாக சோழ சிற்பிகள் வடித்துள்ளனர்.
அதுமட்டுமில்லாமல் சிங்கம், குதிரை, யாளி போன்ற விலங்குகளின் சிற்பங்களும், பாம்புகளுக்கு அரசனான நாகராஜன், கடற்கன்னி சிற்பங்களும் காணப்படுகின்றன.
எண்ணற்ற மிக மிக மிக நுண்ணிய சிற்பங்கள் காணப்படுகிறது.
சிற்பங்களை ரசிக்கும் ஒவ்வொருவரும் காணவேண்டிய சிறப்பு மிக்க தமிழ்நாட்டின் சிற்ப கோவில். சிற்பங்களை இரசிக்க தெரியாதவர்கள் கூட இக்கோவிலுக்கு சென்றால் ரசிக்க கற்றுக்கொள்வார்கள்.
உலகப் பாரம்பரிய சின்னம்
இந்தியாவில் மொத்தம் 38 உலக பாரம்பரிய தளங்கள் உள்ளன. அதில் தமிழ்நாட்டில் 2 தளங்கள் உள்ளன. அதில் ஒரு தளமான "Great Living Chola Temples" என்ற தளத்தில் மூன்று கோவில்கள் உள்ளது. அதில் ஒன்று ஐராவதேஸ்வரர் கோவில் .
Comments
Post a Comment