KALABHRA DYNASTY | களப்பிரர் காலம்

சங்க காலத்தில் சேர, சோழ, பாண்டிய அரசுகள் சிறப்பாக தமிழகத்தை ஆண்டுவந்துள்ளனர். திடீரென்று மூன்று அரசுகளும் 300 ஆண்டுகள்  காணாமல் போனது.  அதற்கு காரணம் யார்?

தமிழகத்தை ஆண்ட அரசர்களை  சங்கம் மருவிய காலத்திற்க்கு முன் ஆண்ட அரசர்கள் என்றும், சங்கம் மருவிய காலத்திற்கு பின் ஆண்ட அரசர்கள் என்றும்  இருவகைபடுத்துகிறார்கள். அப்படியென்றால் சங்கம் மருவிய காலத்தை  ஆண்ட வம்சம் எது?

கி.பி.3ம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலிருந்து கி.பி.6ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி வரை  தமிழகத்தை ஏன் இருண்ட காலம் என்றழைக்கிறார்கள்?

இந்த கேள்விகளுக்கெல்லாம் ஒரே விடை  களப்பிரர்கள்.  களப்பிரர்களை பற்றி அறிய ஆர்வமாக உள்ளதா? தொடர்ந்து படியுங்கள்.

களப்பிரர் காலம்
களப்பிரர்களை பற்றி அறிய திடமான சான்றுகள் எதுவும் இல்லை. களப்பிரர்களால் வெளியிடப்பட்ட கல்வெட்டுகளோ, செப்பேடுகளோ இல்லை. இவர்களை பற்றி அறிய சில பல்லவ மற்றும் பாண்டிய செப்பேடுகளும், சில இலக்கிய சான்றுகளும் உதவியாக உள்ளன. ஆனால் இந்த செப்பேட்டையும்,  இலக்கிய சான்றுகளையும் வைத்து களப்பிரர்களின் முழு வரலாற்றை அறியமுடியவில்லை.  

சான்றுகள்
பெரிய புராணத்தில் சேக்கிழார் அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றைக் கூறியுள்ளார். அவர்களுள் ஒருவர் மூர்த்தி நாயனார். இவர் மதுரையில் இருந்து சிவபெருமானுக்குத் திருப்பணி செய்து வந்துள்ளார். அவ்வாறு செய்து வரும் நாளில், கருநாடர் மன்னன் ஒருவன் நால்வகைப் படையுடன் வந்து, அப்போது மதுரையை ஆண்டு வந்த பாண்டிய மன்னனை வென்று மதுரை மாநகரைக் கைப்பற்றிப் பாண்டிய நாட்டை ஆட்சி புரியலானான் என்று சேக்கிழார் மூர்த்தி நாயனார் புராணத்தில் கூறுகிறார். இதனால் களப்பிரர்கள் கர்நாடகம் (கருநாடர்)  பகுதியிலிருந்து வந்தவர்கள்  என்று சிலர் கருதுகின்றனர்.

கி.பி.11ம் நூற்றாண்டில் தோன்றியதாகக் கருதப்படும் நூல் கல்லாடம். இது ஓர் அகப்பொருள் நூல். இந்நூலை இயற்றியவர் கல்லாடர் என்பவர் ஆவார். இவர் இந்நூலில் கருநாடர் வேந்தன் ஒருவன் நால்வகைப் படையுடன் வந்து மதுரையைக் கைப்பற்றிக் கொண்டான் என்றும், அவன் சமணர்களோடு சேர்ந்து கொண்டு, சிவபெருமானுக்குச் சைவர் செய்யும் திருப்பணிகளைச் செய்ய விடாமல் தடுத்தான் என்றும் குறிப்பிடுகிறார்.

பல்யாக முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பாண்டிய அரசனுக்குப் பின்வந்த அளவற்ற பாண்டிய அரசர்களைக் களப்ரன் எனும் கலியரசன் போரில் வென்று பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் என்று வேள்விக்குடிச் செப்பேடு கூறுகிறது. களப்பிரர்களை களவர் என்று அகநானூறு குறிப்பிடுகிறது.

களபோரா என்னும் பெயருள்ள குலம் ஒன்று இருந்ததாக மைசூர் இராச்சியத்தின் (பேலூர்க் கல்வெட்டு) குறிப்பிடுகிறது. களபோரா குலத்தினர் சாதவாகனரின் கீழ் குறுநில மன்னர்களாக இருந்துள்ளனர் என்றும், இவர்கள் சாதவாகனரின் வீழ்ச்சிக்குப் பின் எழுச்சியுற்று தமிழகத்தின் மீது படையெடுத்து வந்தனர் என்று கூறுகின்றனர். ஆனால்  அவர்களால் தெற்கில் தொண்டை மண்டலத்தை  ஆண்டு கொண்டிருந்த பல்லவர்களை வெற்றி கொள்ள முடியவில்லை எனவே அவர்கள் சேரர்களையும், சோழர்களையும், பாண்டியர்களையும் வென்று அவர்களுடைய நாடுகளைக் கைப்பற்றி ஆண்டனர். இந்தக் களபோரா இனத்தவரே களப்பிரர் என்று ஒரு சிலர் கருதுகின்றனர்.

செந்தலை தூண் கல்வெட்டில் காணப்படும் பெரும்பிடுகு முத்தரையன் களவர்-கள்வன் எனப்படுவதால் அவன் களப்பிரர் உடன் இணைந்து பேசப்படுகின்றான். தமிழ் நாவலர் சரிதை, யாப்பருங்கலம் ஆகிய நூலகளும், திருப்புகலூர்க் கல்வெட்டு மற்றும் காஞ்சிபுரத்தில் உள்ள வைகுந்த பெருமாள் கோவில் கல்வெட்டு போன்றவையும் களப்பிரர்கள் குறித்து அறிய உதவும் சான்றுகளாகும்.

களப்பிரர்களின் நாணயம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. நாணயத்தின் முன்புறம் யானை ஒன்று வலப்பக்கம் நோக்கி நிற்கிறது. யானையின் முன்,  மூன்று மரத்தூண்களை கொண்ட இலச்சினை உள்ளது. யானையின் மேல் பகுதியில் இடமிருந்து வலப்பக்கமாக நான்கு பிராமி எழுத்துகள் காணப்படுகின்றன. நாணயத்தின் பின்புறம் ஐந்து கிளைகளுடைய மரச்சின்னம் உள்ளது.
சிலர் களப்பிரர்கள் நீண்ட காலம் ஆட்சி செய்தனர் என்பதை நமபவில்லை. 3ம் நூற்றாண்டுக்கும் 6ம் நூற்றாண்டுக்கும் இடை இடையே தமிழகத்தை ஆட்சி செய்திருக்கலாம் என்று கருதுகின்றனர்.

களப்பிரர் ஆட்சி
களப்பிரர்கள் ஆண்ட காலத்தையே சங்கம் மருவிய காலம் (கி.பி.3-6) என்று குறிப்பிடுகிறார்கள். தமிழ் பண்புகளுக்கு ஒவ்வாத பரம்பரையினம் என்பதாலும், இவர்களை பற்றி அறிய ஒரு சில சான்றுகள் மட்டுமே உள்ளதாலும் வரலாற்று அறிஞர்கள் களப்பிரர் ஆண்ட காலத்தை இருண்ட காலம் என்றழைக்கிறார்கள். 

இவர்கள் காலத்தில் வட இந்திய சமயங்களான புத்தமும், சமணமும் தமிழ்நாட்டில் பரவத் தொடங்கின. தமிழரின் தொன்மையான சமயக் கருத்துக்கள் மங்கி புதிய சிந்தனைகள் தோன்றின.

இவர்களால் தமிழகத்தில் வடமொழியும், பிரகிருதமும் அறிமுகப்படுத்தப்பட்டன. இதனால் வட்டெழுத்து என்ற புதிய வரிவடிவம் வளர்ச்சி பெற்றது.

அச்சுத விக்கந்தக் களப்பாளன்
இவர் களப்பிர அரசர்களில் ஒருவனாவார். அச்சுத களப்பாளன் என்ற களப்பிர மன்னன் தமிழகத்தை ஆட்சி செய்தான் என்று யாப்பருங்கலம் குறிப்பிடுகிறது. உறையூர் இவனது தலைநகரமாகும்.

புத்த சமய அறினரான புத்த தத்தர், புத்த கோஷர், போதி தர்மர் போன்றவர்கள்  இவர்  காலத்தை சார்ந்தவர்களாகும். புத்த சமயத்தையும், புத்த மடங்களையும் இவன் பெருமளவில் ஆதரித்தார்இவர் பல தமிழ் புலவர்களையும் ஆதரித்தார்களப்பிர அரசர்களில் இவர் ஒருவரை பற்றியே அறிய முடிகிறது. மற்ற அரசர்களை பற்றி அறிய முடியவில்லை.

கல்வியும் இலக்கியமும்
களப்பிரர் ஆட்சியில் தமிழக மக்களின் சமூக வாழ்க்கையில் வீழ்ச்சி காணப்பட்டாலும், அரசியலில் குழப்பம் ஏற்பட்டாலும், தமிழ் இலக்கியமும், கல்வியும் ஓங்கியே இருந்துள்ளது. 

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஆசாரக்கோவை, இன்னாநாற்பது, இனியவைநாற்பது, ஏலாதி, சிறுபஞ்சமூலம், திரிகடுகம், திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி நானூறு, முதுமொழிக் காஞ்சி போன்ற 11 அறநூல்களும், ஐந்திணை எழுபது, ஐந்திணை ஐம்பது, கார் நாற்பது, கைந்நிலை, திணைமாலை நூற்றைம்பது, திணைமொழி ஐம்பது போன்ற 6 அகத்திணை நூல்களும், களவழி நாற்பது என்ற ஒரு புறத்திணை நூலும் களப்பிர காலத்தில் இயற்றப்பட்டதாகும்.

ஐம்பெருங்காப்பியங்களில் இரட்டை காப்பியம் என்றழைக்கப்படும் சிலப்பதிகாரம்- மணிமேகலையும், சீவக சிந்தாமணி, குண்டலகேசி போன்றவைகளும் களப்பிர காலத்தில் தோன்றியவைகளாகும். களப்பிரர் காலத்தில் நிகண்டுகள் இயற்றப்பட்டன.

களப்பிரர்களின் காலத்திலே காரைக்காலம்மையாரும், திருமூலரும் வாழ்ந்தனர். காரைகாலம்மையார் அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டை மணிமாலை, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் இரண்டு என்பவற்றை இயற்றினார். இவை பதினோராம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன.

திருப்பாதிரிப்புலியூரில் சமணப்பள்ளி ஒன்று செயல்பட்டுள்ளது. சர்வநந்தி, வஜ்ரநந்தி ஆகியோர் களப்பிரர் காலத்தில் வாழ்ந்த சமண சமய அறிஞர்கள் ஆவர்.

களப்பிர காலத்து நூல்கள் சங்கம் மருவிய நூல்கள் என்றும், இருண்ட நூல்கள் என்றும் அழைக்கப்படுகின்றது.

களப்பிரர் காலத்தின் இறுதியில் சைவ சமயம் புகழடைய தொடங்கியது. களப்பிர மன்னர்களில் ஒரு சிலர் சைவ சமயத்தை தழுவினார். களப்பிரர் காலத்திற்கு பிறகுதான் பக்தி இயக்கம் வேகமாகப் பரவியது. சைவமும், வைணமும் வளர்ச்சி பெற்றன.

களப்பிரர்களின் முடிவு 
கி.பி.ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் பாண்டிய மன்னன் கடுங்கோன் தென் தமிழ்நாட்டை களப்பிரர்களிடமிருந்து மீட்டான். அதே சமயத்தில், களப்பிரர்களை விரட்டிவிட்டு, முழு தொண்டைமண்டலத்தையும், சோழ மண்டலத்தையும் பல்லவ அரசன் சிம்மவிஷ்ணு கைப்பற்றினார். இவ்வாறு தமிழ்நாட்டில் களப்பிரர்கள் ஆட்சி முடிவுக்கு வந்தது.

களப்பிரர்கள் தமிழகத்தின் தொண்டை மண்டலத்தின் சில பகுதிகளையும், சேர, சோழ, பாண்டியர்களின்  முழு மண்டலங்களையும்  ஆண்டு வந்துள்ளனர். வரலாற்று சிறப்புமிக்க நூல்களை தந்துள்ளனர்.

இவ்வளவு சிறப்புமிக்க நூல்களையும், காப்பியங்களையும் தந்த களப்பிரர் காலம் என்னை பொறுத்த வரையில் தமிழகத்தின் பொற்காலம் ஆகும்.


களப்பிரர்களின் காலம் முடிவுற்றது.

குறிப்பு 
மேற்கூறிய அனைத்து தகவல்களும் பல புத்தககளிலிருந்து சேகரிக்கப்பட்டதாகும்.

இப்படிக்கு, 
☺சே.தீபா☺






Comments

Popular posts from this blog

Todas | Nilgiri Tribes

Pallava art and architecture | பல்லவர்களின் கலை மற்றும் கட்டிடக்கலை | பல்லவர்களின் கோவில்கள்- Part 1

முற்கால முதல் மன்னன் | சிம்மவர்மன் | Early Pallavas | Simhavarman