சோழர்களின் கோவில் | தஞ்சைப் பெருவுடையார் கோயில்| CHOZHA TEMPLE| BIG TEMPLE| UNESCO SITE|
தஞ்சைப் பெருவுடையார் கோயில்
சோழர்களின் வரலாறு மற்றும் அவர்களின் கலை நயத்தை அறிய அவர்கள் கட்டிய கோவில்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. சோழர்களில் புகழ்மிக்க இடைக்கால அரசன் அருள்மொழி வர்மன் என்றழைக்கப்படும் முதலாம் இராஜராஜ சோழனின் கலை நயத்தை பற்றி அறிய அவர் காலத்தில் கட்டிய தஞ்சைப் பெருவுடையார் கோவில் முக்கிய பங்கு வகிக்கிறது.
கோவிலின் வரலாறு
கி.பி 985ல், சோழப் பேரரசனாக முடிசூடிக்கொண்ட ராஜராஜன், தன் 25 -ம் ஆட்சியாண்டில் உலகமே வியக்கும் வண்ணம் பெரிய கோயிலைக் கட்டியெழுப்பினான். ராஜராஜன் காலத்தில் இக்கோயில், `ராஜராஜேஸ்வரம்’ என்று அழைக்கப்பட்டது. அதன்பிறகு, பெருவுடையார் கோயில், பெரியகோயில், 17-ம் மற்றும் 18-ம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் தஞ்சை ஆளப்பட்டபோது இக்கோவில் பிரகதீஸ்வரர் ஆலயம் என்று அழைக்கப்பட்டுள்ளது.
தமிழினத்தின் தனிப்பெரும் அடையாளமாகத் திகழ்கிறது, தஞ்சைப் பெருவுடையார் கோயில். பெரியகோயில் என்று அழைக்கப்படும் தஞ்சைப் பெருவுடையார் கோயிலை எழுப்பிய சோழப் பேரரசன் ராஜராஜனின் ஆட்சி, நிர்வாகத் திறன், ராணுவ வலிமை, கலை, கட்டுமானம் என்று அனைத்துக்கும் சாட்சியாக நிற்கிறது.
காஞ்சியில் பல்லவ அரசன் ராஜசிம்மனால் கட்டப்பட்ட கைலாசநாதர் கோவில் ராஜராஜனை மிகவும் கவர்ந்ததுள்ளது. அதைவிட பிரமாண்டமாக யாரும் கட்டாத அளவுக்கு சிவனுக்கு கட்டவேண்டும் என்று நினைத்துள்ளார். அப்படி கட்டப்பட்ட கோவில்தான் தஞ்சை பெரிய கோவில் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
இக்கோவில் கல்வெட்டின் படி குஞ்சர மல்லன் ராஜராஜ பெருந்தச்சன் என்பவர்தான் பெரிய கோவிலின் பொறியாளராக இருந்துள்ளார்.
முழுவதும் கற்களால் ஆன பெரியகோயிலின் எடை, சுமார் 1,40,000டன் என்கிறார்கள் கட்டடக்கலை நிபுணர்கள்.
விமானம்
இக்கோவில் ஒரு ஆண் அமைப்பு ஆகும்.
பெரிய கோவிலின் விமானம் மிகத் திறமையான தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டுள்ளது. சுக்கான் பாறை நிலப்பரப்பில் 350 அடிக்குத் தொட்டி போன்ற பகுதியை உருவாக்கியிருக்கிறார்கள். மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்த காட்டாறுகளில் இருந்து மணலைக் கொண்டு அத்தொட்டியில் கொட்டியிருக்கிறார்கள். அதன் மேல் மரக்கால் வடிவில் அடித்தளம் அமைத்து கனமான கல் பொருத்தி தரைமட்டத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
அதுவரை ஒற்றைச் சுவராகக் கொண்டு வந்து தரைக்கு மேலே இரட்டைச் சுவராகக் கொண்டுபோய் கோபுரமாக உயர்த்தியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையின் வடிவத்தில் இருக்கிறது விமானக் கட்டுமானம். இதற்குப் பெயர், டைனமிக் ஆர்க்கிடெக்சர். இதன் சிறப்பு என்னவென்றால், பூமியின் ஆட்டத்துக்கேற்றவாறு கோபுரமும் அசைந்து தன்னைத் தகவமைத்துக்கொள்ளும். அதனால்தான் எல்லா இயற்கைச் சீற்றங்களையும் தாக்குப்பிடித்து நிற்கிறது.
பிரம்மாந்திரக் கல் இதன் எடை, சுமார் 40 டன். அதற்குக் கீழே இருக்கும் பலகையின் எடை, சுமார் 40 டன். அந்தப் பலகையில் எட்டு நந்திகள் வீற்றிருக்கின்றன. அவற்றின் மொத்த எடை, சுமார் 40 டன். இந்த 120 டன் எடைதான் ஒட்டுமொத்த கோயில் கோபுரத்தையும் ஒரே புள்ளியில் அழுத்திப் பிடித்து, புவியீர்ப்பு சக்திமூலம் தாங்கி நிற்கிறது.
தமிழும் பெரியகோவிலும்
கோவில் கோபுரத்தின் உயரம் 216 அடி, தமிழ் உயிர்மெய் எழுத்துக்களின் எண்ணிக்கை 216
சிவலிங்கத்தின் உயரம் 12 அடி, தமிழ் உயிரெழுத்துக்கள் 12
சிவலிங்க பீடம் 18 அடி, தமிழ் மெய் எழுத்துக்கள் 18
சிவலிங்கத்திற்கும் நந்திக்கும் உள்ள இடைவெளி 247 அடி, தமிழில் மொத்தம் 247 எழுத்துக்கள்.
நந்தி
ராஜராஜன் வாயிலுக்கு எதிரே உள்ள 16 கால்மண்டபத்தில் ஒரே கல்லில் வடிக்கப்பட்ட மிகப்பெரிய நந்தி உள்ளது. இந்த நந்தி கி.பி. 16-ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் காலத்தில் நாயக்க மன்னர்களால் உருவாக்கபட்டதாகும். இந்த மண்டபத்துக்கு தென்புறம் திருச்சுற்று மாளிகையில் வடதிசை நோக்கியவாறு காணப்படும் நந்தியே ராஜராஜன் காலத்தில் கோவிலுக்காக வடிக்கபட்டது. தஞ்சை பெரிய கோவிலில் இருக்கும் நந்தியின் சிலை இந்திய கோவில்களில் இருக்கும் மிகப்பெரிய நந்தி சிலைகளில் ஒன்றாகும்.
முக்கிய தெய்வங்கள்
பெரிய கோவிலின் பிரதான நுழைவு வாயிலுக்குக் கிழக்கில் உடையார் சாலை இருக்கிறது. உள்ளே அக்னிதேவர் சந்நிதி இருக்கிறது. இந்த உடையார் சாலையில் 240 சிவயோகியர்கள் தங்கி, ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் 10 பேர் கொண்ட குழுவாகப் பிரிந்து 24 திருவிழாக்களை நடத்தியதாகவும் கல்வெட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கோவிலில் உள்ள செப்புத்திருமேனிகள் பற்றிய பல செய்திகள் இந்த உடையார் சாலையில் கல்வெட்டுகளாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு தூணும் புத்தகங்களைப்போல எழுத்துகளால் நிறைந்திருக்கின்றன.
இங்கிருக்கும் நந்தி மண்டபம், அம்மன் சந்நிதி, வாகன மண்டபங்கள் அனைத்தும் பிற்காலக் கட்டுமானங்கள். விமானத்தை ஒட்டி, கருவறைக்குத் தெற்கேயுள்ள தட்சிணாமூர்த்தியை உருவாக்கியது மராட்டியர்கள். வாராகியும் அண்மைக்கால வருகைதான். மகா மண்டபத்தின் மேற்பகுதியும் பிற்காலக் கட்டுமானம்தான். கோவிலைச் சுற்றியிருக்கும் திருச்சுற்றுமாளிகை, ராஜராஜன் காலமான பிறகு கட்டப்பட்டது.
உலகப் பாரம்பரிய சின்னம்
தமிழகத்தின் மிகவும் பிரபலமான சுற்றுத்தளமான பெரிய கோவில் 1987ம் ஆண்டு UNESCO-வால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.
மாலிக்குகளும், நவாப்களும், சுல்தான்களும் பலமுறை தஞ்சை பெரிய கோவிலைச் சூறையாடினர். பிரெஞ்சுக்காரர்களும், ஆங்கிலேயரும் பீரங்கிகளைவைத்துத் தகர்த்தனர். 30 ஆண்டுகளுக்கும் மேல் சிப்பாய்களின் கூடாரமாக இருந்த பெரிய கோவில் பல தாக்குதல்களைச் சந்தித்தது. இருந்தும் அதன் கம்பீரத்தை யாராலும் சிதைக்க இயலவில்லை. அதனால்தான் அது இன்றும் பெரிய கோவிலாக இருக்கிறது.
Comments
Post a Comment